அண்மைக் காலங்களில், விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது.எனினும், குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை.
லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3Bபோன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம்.
ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா?
எப்படி செய்வது?
- நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள்.
- தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enterவிசையை அழுத்துங்கள்.
- உடனே, வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும். அதில், தேவையான கோப்புகளை இடுங்கள்.
- கோப்புகளை இட்ட பின், “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள்.
- திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள்.
- வெற்று வட்டு எனில், Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- பிம்பமாக (Image) எழுத, Image File என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
- ஏற்கனவே தரவு எழுதப்பட்ட வட்டு எனில், அதன் பெயரைத் தேர்வு செய்யுங்கள்.
- கொஞ்சம் பொறுங்க.. 'Burn' ஐ அழுத்திடாதீங்க!! அடுத்து, பண்புகளை மாற்ற'Properties' பக்கம் செல்லுங்கள்.
- வரும் பக்கத்தில், பண்புகளைத் தகுந்தவாறு மாற்றுங்கள்.
- எழுதும் வேகத்தை மாற்றலாம்.
- மீண்டும் வட்டில் எழுதுவதற்கு வழிவகை செய்ய (Multi-seesion) , 'Leave the Disc Open' என்பதைத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.
- பண்புகளை மாற்றிய பின்னர், 'Burn' பொத்தானைச் சொடுக்குங்கள்.
- ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வட்டு எனில், பழைய கோப்புகளை என்ன செய்வது என கேட்கும். அவற்றை வைத்திருக்க, 'Only Append' என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- சில நிமிடங்களில், உங்கள் வட்டு தயாராகி விடும்!!
பின் குறிப்பு:
இந்த முறை மூலம், தரவு வட்டுகளை (Data Disc) மட்டுமே உருவாக்க இயலும்.ஒலி, ஒளி வட்டுகளை ( Audio/ Video Disc) உருவாக்க முடியாது.
நன்றி:
CD/DVD creation with Nautilus, The Gnome Journal
0 comments: